Monday, 28 February 2011

நாயன்மார் வரலாறு-கல்லாடதேவ நாயனார்

கல்லாடதேவ நாயனார் வரலாறு
பதினொன்றாம் திருமுறையில் நக்கீரதேவர் அருளிய திருக்கண்ணப்பதேவர் திருமறத்தை அடுத்துப் பெயருடைய பிறி தொரு பிரபந்தத்தை அருளிச் செய்தவர். கல்லாடதேவர் ஆவார். இவரும் நக்கீரதேவர் போலப் பிற்காலத்துச் சங்கப் புலவர் பெயர் தாங்கிய பெரும் புலவர் எனக் கொள்ளலாம். இவர் நக்கீரதேவர் காலத்திலோ அவருக்குப் பிற்பட்ட காலத்திலோ வாழ்ந்தவர் எனலாம். எனவே இவர் காலத்தையும் கி.பி. 9-ஆம் நூற்றாண்டாகலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கடைச்சங்கப் புலவருள் ஒருவராகிய கல்லாடர், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியவர். பொறையாற்றுக்கிழான், அம்பர் கிழான் அருவந்தை என்னும் மன்னர்களால் ஆதரிக்கப் பெற்றவர். இவர் பாடியனவாகச் சங்க நூல்களில் பதினொரு பாடல் உள்ளன. இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகும்.
கல்லாடர்கள்
பதினொன்றாம் திருமுறை ஆசிரியராகிய கல்லாட தேவரும், கல்லாடம் என்னும் அகப் பொருட்கோவை பாடிய கல்லாடரும் தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்கு உரை வரைந்த கல்லாடரும் ஆகிய நால்வரும் சங்கப்புலவராகிய கல்லாடர் பெயர் தாங்கிய வேறு வேறு புலவர்களாவர். இந்நால்வருள் பதினொன்றாம் திருமுறைக் கல்லாடரும் கல்லாடம் பாடிய கல்லாடரும் ஒருவராகலாம் எனக் கருதுவோரும் உளர்.

கல்லாடம் தெய்வ நலம் சான்ற நூலாயினும் பதினொன்றாம் திருமுறையில் தொகுக்கப் பெற்றிலது என்பதைக் காணுமிடத்து இந்நூலாசிரியர் காலத்தால் இன்னும் பிற்பட்டவர் ஆகலாம் எனக் கருதுவோரும் உளர்.

நாயன்மார் வரலாறு-கருவூர்த் தேவர்

ஒன்பதாம் திருமுறை
கருவூர்த் தேவர்
கருவூர்த்தேவர் கொங்குநாட்டில் உள்ள கருவூரில் பிறந்தவர். இவர் பிறந்த ஊரோடு இணைத்து இவரது திருப்பெயர் கருவூர்த் தேவர் என வழங்கப்படுகிறது. இவரது இயற்பெயர் இன்னதென்று அறியமுடியவில்லை. இவர் அந்தணர் குலத்தில் தோன்றியவர். வேதாகமக்கலைகள் பலவற்றையும் கற்றுத் தெளிந்தவர். மிகப்பெரிய யோகசித்தர். போக முனிவரிடம் உபதேசம் பெற்று ஞானநூல்கள் பல வற்றையும் ஆராய்ந்து சிவயோகமுதிர்வு பெற்று காயகல்பம் உண்டவர். சித்திகள் பலவும் கைவரப்பெற்றவர். உலக வாழ்வில் புளியம்பழமும் ஓடும்போல ஒட்டியும் ஒட்டாமலும் விளங்கியவர். இவர் செய்த அற்புதங்கள் பலவாகும். இவரது செயல்கள் இவரைப் பித்தர் என்று கருதும்படி செய்தன.

கருவூர்த்தேவர் கொங்குநாடு, வடநாடு, தொண்டைநாடு, நடுநாடு முதலிய இடங்களில் உள்ள தலங்களைத் தரிசித்துக் கொண்டு, தென்பாண்டிநாட்டுத் திருப்புடைமருதூர் சென்று, இறைவனிடம் திருவடிதீட்சை பெற்றார். இவர் திருநெல்வேலியடைந்து நெல்லை யப்பர் சந்நிதியில் நின்று `நெல்லையப்பா` என்றழைக்க, அப்பொழுது பெருமான் இவரது பெருமையைப் பலரும் அறியும் பொருட்டு வாளா இருக்க ``இங்குக் கடவுள் இல்லைபோலும்`` என்று இவர் சினந்து கூற அவ்வாலயம் பாழாகியது என்றும், பின்னர் அவ்வூர் மக்கள் நெல்லையப்பரை வேண்ட அப்பெருமான் கருவூர்த்தேவரை நெல்லை யம்பதிக்கு அழைத்து வந்து காட்சியளிக்க, மீண்டும் அவ்வாலயம் செழித்தது என்றும் கூறுவர்.

கருவூர்த்தேவர் நெல்லையில் இருந்து திருக்குற்றாலம் சென்று அங்குச் சிலநாள் தங்கியிருந்து, பொதிய மலையை அடைந்து அகத்தியரைத் தரிசித்து அருள்பெற்றார்.

தஞ்சையில் முதலாம் இராஜராஜசோழன் (கி.பி. 985-1014) தனது இருபதாம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் கட்டத் தொடங்கிய இராசராசேச்சுரத்துப் பெருவுடையார்க்கு அஷ்டபந்தன மருந்து சார்த்தினன். அம்மருந்து பலமுறை சார்த்தியும் இறுகாமல் இளகிக் கொண்டிருந்தது. அது கண்ட அரசன் வருந்தி இருந்தனன். அதனை அறிந்த போகமுனிவர் பொதியமலையில் இருந்த கருவூர்த்தேவரைத் தஞ்சைக்கு வருமாறு அழைப்பித்தார். கருவூர்த் தேவரும் குரு ஆணைப்படி தஞ்சை வந்து, பெருமான் அருளால் அஷ்டபந்தன மருந்தை இறுகும்படி செய்தருளினார்.

தஞ்சையினின்றும் திருவரங்கம் சென்று பின்னர்த் தம் கருவூரை வந்தடைந்தார். கருவூரில் உள்ள வைதிகப்பிராமணர் பலர் கருவூர்த் தேவரை வைதிக ஒழுக்கம் தவறியவர் என்றும், வாம பூசைக் காரர் என்றும் பழிச்சொல்சாற்றி தொல்லைகள் பல தந்தனர். கருவூர்த் தேவர் அவர்களுக்குப் பயந்தவர் போல நடித்து, ஆனிலை ஆலயத்தை அடைந்து, பெருமானைத் தழுவிக்கொண்டார் என்பது புராண வரலாறு.

கருவூர்த் தேவரின் திருவுருவச்சிலை கருவூர்ப் பசுபதீசுவரர் கோயிலிலும், தஞ்சைப் பெரிய கோயிலிலும் விளங்குகிறது.

இவர், கோயில், திருக்களந்தை ஆதித்தேச்சரம், திருக்கீழ்க் கோட்டூர் மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கை கொண்ட சோழேச்சரம், திருப்பூவணம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை, திருவிடைமருதூர் என்ற பத்து சிவத்தலங்கட்கு ஒவ்வொரு பதிகங்கள் வீதம் பத்துத் திருவிசைப்பாத் திருப்பதிகங்கள் பாடியுள்ளார்.
காலம்:
இவர், தஞ்சை இராசராசேச்சரம், கங்கைகொண்ட சோழேச்சரம் ஆகிய இரண்டு தலங்களையும் பாடியிருத்தலின் இவர் கி.பி. 10 ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியிலும், 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர் எனலாம்.

நாயன்மார் வரலாறு-கபிலதேவ நாயனார்

கபிலதேவ நாயனார் வரலாறு
பதினொன்றாம் திருமுறையில் மூத்தநாயனார் திரு இரட்டை மணிமாலை, சிவபெருமான் திரு இரட்டை மணிமாலை, சிவபெருமான் திரு அந்தாதி ஆகிய மூன்று பிரபந்தங்களை அருளியவர் இவர். கடைச்சங்கப் புலவராகிய கபிலரும் இவரும் ஒருவரே எனக் கருதுவோரும் உளர்.


விநாயகர் வழிபாடு
விநாயகர் வழிபாடு தமிழகத்தில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் பரவலாக இடம் பெற்றிருக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுவதால் மூத்த நாயனாராகிய விநாயகர் மீது பிரபந்தம் அருளிய இவர் கி.பி. 8-ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்பர் சிலர். மேலும் இவர் அருளிய யாப்பு வகைகள் பிற்காலத்தன ஆதலினானும் இவர்தம் நூல்களின் சொல்லாட்சிகள் பிற்காலத்தனவாய் இருத்தலானும் இவரும் கி.பி. 9-ஆம் நூற்றாண்டினை அடுத்து வாழ்ந்தவர் ஆதல் கூடும் எனப் பேராசிரியர் திரு. க வெள்ளைவாரணனார் ஆராய்ந்து நிறுவியுள்ளார்.

இளம்பூரணர் தொல்காப்பியப் பொருள் அதிகாரச் செய்யுளி யலில், கபிலர் இயற்றிய இரண்டு செய்யுட்களை மேற்கோள் காட்டியிருத்தலின் இக்கபிலர் இம்பூரணர்க்கு முற்பட்டவர் எனக் கொள்ளலாம்.

சங்கப்புலவராகிய கபிலர் வேள்பாரியின் இனிய நண்பர். அந்தணர், `பொய்யா நாவிற் கபிலன்` எனப் போற்றப்பட்டவர். ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்திக் குறிஞ்சிப்பாட்டுப் பாடியவர். செல்வக்கடுங்கோ வாழியாதன் மீது பதிற்றுப் பத்துள் ஒரு பத்துப் பாடிப் பரிசில் பெற்றவர். கலித்தொகையில் குறிஞ்சித்திணை பாடிக் `குறிஞ்சிக் கபிலன்` என்ற பெயரைப் பெற்றவர்.

நாயன்மார் வரலாறு-கண்டராதித்தர்

ஒன்பதாம் திருமுறை
கண்டராதித்தர்
திருவிசைப்பாவை அருளிச்செய்த ஆசிரியர்களில் ஐந்தா மவர் கண்டராதித்தர். இவர் தில்லைச் சிற்றம்பலத்திற்குப் பொன் வேய்ந்து புதுப்பித்த முதற் பராந்தக சோழன் (கி.பி. 907-953) என்ப வனின் இரண்டாவது திருமகனாராவர்.

கண்டராதித்த சோழர் கி.பி. 950-957 சோழநாட்டைத் திறம் பட ஆண்டவர். சிறந்த சிவ பக்தர், தேவாரத் திருமுறைகளிடத்து மிக்க பற்றுடையவர். இவரைச் சிவஞான கண்டராதித்தர் எனக் கல்வெட்டுக் கூறுகிறது. கண்டராதித்தர் தில்லைப்பதியில் எழுந்தருளிய நடராசப் பெருமானிடத்தும், திருவாரூர்த் தியாகேசப் பெருமானிடத்தும் பெரிதும் ஈடுபாடுடையவர், செந்தமிழ்ப் புலமை சான்ற இம் மன்னர் பல சிவாலயத் திருப்பணிகளைப் புரிந்துள்ளார். புறச்சமயிகளை மதித்துப் போற்றும் உயர் பண்பு இவர்பால் இருந்தது. திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே கொள்ளிடத்திற்கு வடகீழ்ப் பகுதியில் கீழ் மழநாட்டின் தலைநகரான திருமழபாடிக்கு மேற்கே ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ள ஊர் ஒன்று கண்டராதித்த சதுர்வேதிமங்கலம் என்ற பெயரால் வழங்கப்பெற்றது. அது இப்போது கண்டிராச்சியம் என வழங்குகிறது.
செம்பியன்மாதேவி:
கண்டராதித்தரின் மனைவியார் மழவர்குலத்துத் தோன்றிய செம்பியன் மாதேவியாராவர். இவர் உத்தமசோழன் (மதுராந்தகன்) என்பவனை மகனாகப்பெற்றவர். இவ்வம்மையார் சிறந்த சிவபக்தர். கி.பி. 957-ல் தம் கணவன் சிவபெருமான் திருவடி நிழலையடைந்த போது இவ்வம்மையார் தம் புதல்வனைக்காக்கும் கடமையை மேற் கொண்டு, தாமும் உடன்கட்டை ஏறாது உயிருடன் வாழ்ந்தார். கோனேரிராஜபுரம் (திருநல்லம்) திருவக்கரை முதலிய சிவாலயங் களுக்குத் திருப்பணி புரிந்தவர். சிவபக்தியிலும், சிவத்தொண்டிலும் பெரிதும் ஈடுபட்ட காரணத்தால் இவ்வம்மையார் `மாதேவடிகள்` என்ற சிறப்புப்பெயர் பெற்றார். முதல் இராசராசசோழன் தென்னாட்டைச் சிவனுறை திருநாடாகச் செய்ததற்குச் செம்பியன் மாதேவியார் தூண்டுகோலாக உதவினார். இராஜராஜசோழனின் 16-ஆம் ஆட்சியாண்டில் கி.பி. 1001-ல் இவ்வம்மையார் இறைவன் திருவடி நீழலை அடைந்தார்.

கண்டராதித்தர் தில்லைப் பெருமானைப்பாடிய திரு விசைப்பாப் பதிகம் ஒன்றேயாகும். அப்பதிகத்தின் எட்டாம் திருப் பாடலில் தம் முன்னோர் சிறப்பியல்புகளையும், திருக்கடைக்காப்புச் செய்யுளில் தம்மைக் கோழிவேந்தன் (கோழி - உறையூர்) தஞ்சையர்கோன் என்றும் கூறிக்கொள்கின்றார்.
காலம்:
கண்டராதித்தர் கி.பி. 950 முதல் கி.பி. 957 வரை ஆண்டவர். ஆதலின் இவர் காலம் 10-ஆம் நூற்றாண்டு என்பது தெளிவு.

நாயன்மார் வரலாறு - இளம்பெருமாள் அடிகள்

இளம்பெருமாள் அடிகள் வரலாறு
பதினொன்றாம் திருமுறையுள் சிவபெருமான் திரு மும்மணிக் கோவை என்னும் பிரபந்தத்தை அருளியவர் இவர்.
பெயர்க்காரணம்
பெருமான் அடிகள் என்பது சிவபெருமானைக் குறிக்கும் பெயர். திருஞானசம்பந்தர் தேவாரத்தில் திருக்கடவூர்த் திருப்பதிகப் பாடல்கள் தோறும் சிவபெருமானைப் பெருமான் அடிகள் என அவர் போற்றக் காணலாம். இளம்பெருமான் என்ற பெயர் முருகனைக் குறித்த பெயர் ஆகலாம். என்றும் இளமை குன்றா நிலையில் விளங்கும் பெருமானுக்கு இப்பெயர் மிகவும் ஏற்புடையதாகும்.

கடவுட் பெயரை மக்கட்கு இட்டு வழங்கும் மரபில் பெற்றோர் இப்பெயரை இவருக்குச் சூட்டியிருத்தல் கூடும்.

இனிச்சிவபிரானுக்கு உரிய பெருமானடிகள் என்ற பெய ருடையார் இருவர் உளராக அவரின் இளையவர் என்ற பொருளில் இவர் இளம் பெருமான் அடிகள் எனப் பெற்றவர் ஆதலும் கூடும்.

இவர் வாழ்ந்த காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் இறுதியும் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆகலாம்.

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் வரலாறு
இத்திருமுறையில் ஐந்தாவது பிரபந்தமாகிய சேத்திரத் திருவெண்பாவை அருளியவர் ஐயடிகள் காடவர்கோன் நாயனார். இவர் திருத்தொண்டத் தொகையில் சுந்தரரால் `ஐயடிகள் காடவர் கோன் அடியார்க்கும் அடியேன்` எனப் போற்றப் பெறுபவராவார். சேக்கிழார் பெரிய புராணத்தில் இந்நாயனாரின் வரலாற்றை விளங்க விரித்துரைத்துள்ளார்.
பெயர் விளக்கம்
காடவர் என்பது பல்லவ மன்னர் குலத்தினரைக் குறிக்கும் பொதுப்பெயர். ஐயடிகள் என்பது ஐயனடிகள் என்பதன் மரூஉ வாகும்.ஐயடிகள் காடவர்கோன் என்னும் பெயர் ஐயனடிகளாகிய பல்லவ மன்னர் என்ற பொருள் தரும் பெயராகும்.
ஆட்சிச் சிறப்பு
ஐயடிகள் உலகில் புகழ் நிலவ அரசு புரிந்த பல்லவர் குலத்தில் தோன்றினார். நாட்டில் வறுமையும் பகையும் குடிகளை வருத்தா வண்ணம் நீதிநெறியோடு ஆட்சி புரிந்தார். சிவநெறியைப் போற்றி வளர்த்தார்.

திருமலியும் புகழ்விளங்கச் சேணிலத்தில் எவ்வுயிரும் பெருமையுடன் இனிதமரப் பிறபுலங்கள் அடிப்படுத்துத்
தருமநெறி தழைத்தோங்கத் தாரணிமேல் சைவமுடன்
அருமறையின் துறைவிளங்க அரசளிக்கும் அந்நாளில்
என இம்மன்னரது பெருவீரத்தையும் சிவநெறிப் பற்றையும் சேக்கிழார் விளக்கியுள்ளார்.
துறவுள்ளம்
மன்னரெல்லாம் தம் ஆணைவழி நிற்கவும் வடமொழி தமிழ் மொழிகளின் கலைத் தொண்டுகள் சிறக்கவும் ஆட்சிசெய்த இம் மாமன்னர் அரசுரிமை தன் சிவனடித் தொண்டுக்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்துத் தலயாத்திரை மேற்கொண்டு சிதம்பரம் முதலான அனைத்துச் சிவ தலங்களையும் வழிபட்டு ஓரோர் வெண்பாவால் அத்தலங்களைப் போற்றிப் பாடினார். அவ்வெண்பாக்களில் இருபத்து நான்கு பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றின் தொகுப்பே சேத்திரத் திருவெண்பா எனப் பெறுகிறது. இப்பாடல்கள் பலவற்றிலும் நாயனார் நிலையாமையை உணர்த்தி தலங்களுக்கு ஆற்றுப்படுத்தலால் இவரது துறவுள்ளம் இப்பாடல்களில் விளங்கக் காணலாம்.

இவ்வாறு ஐயடிகள் செந்தமிழால் சிவ நெறி போற்றியும் தமக்கு இயைந்த ஆலயத் திருப்பணிகள் ஆற்றியும் வாழ்ந்து முடிவில் சிவலோகம் எய்திச் சிவபிரான் திருவடிகளை அடைந்தார் என்பது பெரிய புராணம் உணர்த்தும் இந்நாயனார் வரலாறாகும்.
ஐயடிகள் யார்?
இந்நாயனார் பல்லவ மன்னர்களில் யாவர் என்பதையும் இவரது காலத்தையும் பேராசிரியர் திகு. க. வெள்ளை வாரணனார் விரிவாக ஆராய்ந்து தெளிவு செய்துள்ளார்.

சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் `கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்` எனக் குறிப்பிடப்பெறும் மன்னன் காஞ்சியில் கைலாசநாதர் கோயிலைக் கட்டிய இராஜசிம்மப் பல்வனாவான் என்றும் அம்மன்னனது தந்தையாகிய முதலாம் பரமேசுவரவர்மனே ஐயடிகள் காடவர்கோன் ஆவார் எனவும் அவர் தெளிவு செய்துள்ளார்.

முதலாம் பரமேசுவரவர்மன் காலத்தில் பெரும் போர் ஒன்று நிகழ்ந்தது. சாளுக்கிய வேந்தனாகிய இரண்டாம் புலிகேசியின் மகன் விக்கிரமாதித்தன் என்பான் தமிழ் மாநிலத்தைக் கைப்பற்றக் கருதி தமிழகம் வந்து இம் மன்னனோடு பெரும் போர் புரிந்து வென்று பாண்டி நாட்டைக் கைப்பற்ற முனைந்தபோது பாண்டியன் நெடுமாறன் மகனாகிய கோச்சடையன் என்பானிடம் தோல்வியுற்றுத் திரும்ப நேர்ந்தது. இவ்வேளையில் அவனிடம் தோற்ற பல்லவனாகிய முதலாம் பரமேசுவரவர்மன் தன் படைகளுடன் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள பெருவளநல்லூரில் விக்கிரமாதித்தனோடு போரிட்டு வெற்றி கொண்டான். தோற்ற விக்ரமாதித்தன் ஒரு கந்தையைப் போர்த்திக்கொண்டு தன் நாடு திரும்பினான்.

விக்கிரமாதித்தனைப் பரமேசுவரவர்மன் வெற்றி கொண்டதைக் கைலாசநாதர் கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது. சேக்கிழார் ஐயடிகள் காடவர்கோனின் பெருவீரத்தைக் குறிப்பிடும் பாடல் இப்போரைக் குறித்ததாகலாம். ஆதலின் அம்மன்னனே ஐயடிகள் என்பதையும் அறியலாம்.

பரமேசுவரவர்மன் கூரம் என்ற ஊருக்குப் பரமேசுவர மங்கலம் எனப் பெயர் சூட்டி அவ்வூரில் விச்சாவிநீத பல்லவ மன்ன பரமேசுவரக்கிருகம் என்ற சிவாலயத்தை முதன் முதல் கற்றளியாகக் கட்டிய பெருமைக்கு உரியவன். மாமல்லபுரத்தில் இவன் பாட்ட னாகிய நரசிம்மவர்மன் காலத்தில் தொடங்கி இம்மன்னனால் முற்று விக்கப்பட்ட ஆலயத்தில் காணும் கல்வெட்டால் இவன் வடமொழி தென்மொழிகளில் வல்லவன் என்பதை உணரலாம்.

இவ்வாறு பெருவீரனாகவும், சிவநெறியாளனாகவும் புலமையாள னாகவும் விளங்கிய பரமேசுவரவர்மன் தன் ஆட்சியைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்துவிட்டு, தலங்கள் தோறும் சென்று வழிபட்டு வெண்பா மாலைகளால் இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்ததால் அவன் மகனாலும் குடிமக்களாலும் இம்மன்னன் `ஐயடிகள்` எனப் போற்றப் பெற்றான் என்று கொள்ளலாம். இவர் காலம் கி.பி. 670 முதல் 685 வரையாகும்.

நாயன்மார் வரலாறு - இளம்பெருமாள் அடிகள்

இளம்பெருமாள் அடிகள் வரலாறு
பதினொன்றாம் திருமுறையுள் சிவபெருமான் திரு மும்மணிக் கோவை என்னும் பிரபந்தத்தை அருளியவர் இவர்.
பெயர்க்காரணம்
பெருமான் அடிகள் என்பது சிவபெருமானைக் குறிக்கும் பெயர். திருஞானசம்பந்தர் தேவாரத்தில் திருக்கடவூர்த் திருப்பதிகப் பாடல்கள் தோறும் சிவபெருமானைப் பெருமான் அடிகள் என அவர் போற்றக் காணலாம். இளம்பெருமான் என்ற பெயர் முருகனைக் குறித்த பெயர் ஆகலாம். என்றும் இளமை குன்றா நிலையில் விளங்கும் பெருமானுக்கு இப்பெயர் மிகவும் ஏற்புடையதாகும்.

கடவுட் பெயரை மக்கட்கு இட்டு வழங்கும் மரபில் பெற்றோர் இப்பெயரை இவருக்குச் சூட்டியிருத்தல் கூடும்.

இனிச்சிவபிரானுக்கு உரிய பெருமானடிகள் என்ற பெய ருடையார் இருவர் உளராக அவரின் இளையவர் என்ற பொருளில் இவர் இளம் பெருமான் அடிகள் எனப் பெற்றவர் ஆதலும் கூடும்.

இவர் வாழ்ந்த காலம் கி.பி.9-ஆம் நூற்றாண்டின் இறுதியும் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆகலாம்.

நாயன்மார் வரலாறு - அதிரா அடிகள்


பதினொன்றாம் திருமுறை
பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரதேவர், கல்லாட தேவர், கபிலதேவர், பரணதேவர், இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், பட்டினத்து அடிகள் நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய பன்னிருவராவர்.

இவர்களுள் திருவாலவாயுடையார் மதுரைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுள் ஆவார். ஏனையோருள் காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகிய மூவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் திருத்தொண்டத் தொகையில் போற்றப்பெற்ற நாயன்மார்கள் ஆவர். இவர்கள் வரலாறு பெரிய புராணத்தில் விரி வாகக் கூறப்பட்டுள்ளது.

சங்கப்புலவரும் சங்கப்புலவர் பெயர் தாங்கியவர்களுமாக நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர் ஆகிய நால்வர் உள்ளனர்.

ஏனையோராக இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், திருவெண்காட்டு அடிகள் எனப்படும் பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய நால்வர் விளங்குகின்றனர்.


அதிரா அடிகள் வரலாறு
பதினொன்றாம் திருமுறையில் மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவையைப் பாடியவர் அதிரா அடிகள் ஆவார்.
துளங்காத சிந்தை
இவர் எதற்கும் அஞ்சாத சிந்தையராய் வாழ்ந்தவர் ஆதலின் அதிரா அடிகள் எனச் சான்றோர் இவரைப் போற்றினர். திருநாவுக்கரசு சுவாமிகள் துளங்காத சிந்தை உடையவரை,
வரும்பயனை எழுநரம்பின் ஓசை யானை
வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி
அரும்பயம்செய் அவுணர்புரம் எரியக் கோத்த
அம்மானை அலைகடல் நஞ்சு அயின்றான் தன்னைச்
சுரும்பமரும் குழல்மடவார் கடைக்கண் நோக்கில்
துளங்காத சிந்தையராய்த் துறந்தோர் உள்ளப்
பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவாநாளே. (தி.6 ப.1 பா.7)
எனப் போற்றுகின்றார். அதிர்ச்சி - நடுக்கம்.
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய் (குறள்., 429)
என்ற திருக்குறளின்படி அடியவர் இடர்கடி கணபதியின் திருவடி களைப் பற்றிக்கொண்டு இடையூறுகள் இன்றி இனிதே வாழ்ந்தவர் ஆதலின் இப்பெயர்  பெற்றார் எனவும் கொள்ளலாம்.

இவர் காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளலே ஏற்புடைத்தாகும்.

ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அருள்வாக்கு

லோக வாஸனை!

லோக வாசனைகளில் நன்றாகத் தடிப்பேற்றிக்கொண்டு ஒழுங்கு கெட்டுப்போன நாம் முதலில் லோக கார்யங்களை ஒழுங்காகச் செய்து அந்தத் தடிப்பைத் தேய்த்துத் தேய்த்துக் கரைத்துவிட்டு அப்புறந்தான் லோகத்தைவிட்ட ஆத்மாவுக்குப் போக வேண்டும். அதாவது, முதலில் தர்ம மார்க்கத்தில் போய், அப்புறம்தான் ப்ரஹ்மத்துக்கு முயல வேண்டும். தர்மம் என்பது ஸத்கர்மம் வழியாகவே ஆற்றப்படுவது. அதனால்தான் இன்னாருக்கு இன்ன கர்மம் என்று பக்வம் பார்த்து, அதிகார பேதம் பார்த்துப் பிரித்துக் கொடுத்திருக்கும்போது அப்படிப்பட்ட கர்மத்தையே அவரவருக்கும் ஸ்வ கர்மம் என்று சொல்லாமல் ஸ்வதர்மம் என்று சொல்லியிருப்பது.
வ்யாதி போன பிற்பாடுதான் விருந்து சாப்பிட முடியும். ஆத்மானந்தமாகிய அம்ருத போஜனம் பண்ணணுமென்றால் முதலில் கர்ம வ்யாதியையும் மனோ வ்யாதியையும் போக்கிக் கொள்ளவேண்டும். (மனோ வ்யாதி என்றால் மனஸுக்கு ஏற்படும் க்லேசம், ப்ரமை போன்ற வ்யாதியைச் சொல்லவில்லை. மனஸே ஒரு வ்யாதியாக ஆத்மாவிலே தோன்றியிருப்பதைத்தான் சொல்கிறேன்.)

மனஸின் உயர்ந்த பண்புகளோடு கலந்து சரீரத்தின் வேலைகளை அதிகமாகக் கொண்டிருக்கும் தர்ம கர்மாக்கள் மூலமும், சரீரத்தின் வேலைகள் குறைவாகவும் மனஸின் உத்தம குணங்களே அதிகமாக இருக்கும் பக்தி உபாஸனையினாலும் கர்ம வ்யாதி, மனோ வ்யாதிகளைப் போக்கிக் கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் சரீர ப்ரஜ்ஞை மிகவும் அதிகமாதலால் கர்மாவுக்கு முக்யத்வம். அப்புறம் பக்திக்கு முக்யத்வம். அப்புறம்தான் ஆத்ம விசாரமே முக்யமாகிற நிலைக்குப் போவது.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

அருள்வாக்கு

வாயால் ‘நாராயண’ என்று சொன்னால் அது நாராயண ‘வசனம்’தான்; ‘ஸ்மரணம்’ இல்லை. ஸ்மரணம் என்றால் மனஸால் நினைப்பது, நன்றாக நினைப்பது. வெறுமே வாயால் மட்டும் சொல்லி ப்ரயோஜனமில்லை. மனப்பூர்வமாக நினைத்துச் சொல்லணும். ஆனால் நடைமுறையில் என்ன ஆகிற தென்றால், ஒரு ஸ்தோத்திரம், மந்த்ரம் எது வானாலும் சரி, அடிக்கடி ஒரு ‘ரொடீனா’கச் சொல்கிறபோது வார்த்தையை மாத்திரம் சொல்வதாகத்தான் ஆகிவிடுகிறது; அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தமோ அதை மனஸ் நினைக்காமல், மனஸ் அது பாட்டுக்கு எதெதையோ யோசிப்பதாகவும் வாய் மட்டும் மொண மொண பண்ணுவதாகவும் ஆகி விடுகிறது!
அப்படி இங்கேயும் நாராயணனை ஸ்மரிக்காமல் பேரை மாத்திரம் சொன்னால் மஹா தோஷமாகி விடும். மநுஷ்யாளுக்கு மநுஷ்யாள் மிஸப்ரோப்ரியேட் பண்ணுவதே குற்றமென்றால் பகவானுக்கானதஅப்படிப் பண்ணுவது மஹா பெரிய குற்றந்தானே? ஸதா காலமும் ஸர்வ ஜாக்ரதையாக இருந்தா லொழிய, ஒரு ஸந்நியாஸிக்குப் பல பேர் தினந் தினமும் நமஸ்காரம் பண்ணுகிறபோது அவன் ‘நாராயண’ சொல்வது ஒரு ரொடீனாகி விடுவதில் அவன் இப்படிப்பட்ட அபராதத்துக்கு ஆளாகி விடக்கூடும். அதனால்தான் இந்த விதியை ‘ஈஸி’ என்று சொல்லாமல், ‘ஈஸி மாதிரி இருக்கிற’ என்று சொன்னேன்.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி
சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
 

அருள்வாக்கு

உயர்ந்த சந்தோஷத்தைத் தருவதாக நமக்குத் தோன்றுகிற நல்ல ஆசைகள் கூட உண்மையில் துன்பம் தருபவை தான். ஏனென்றால், எப்பேர்ப்பட்ட ஆசையாயிருந்தாலும் அது ஒருவித அரிப்புத்தான். மனசில் அதிருப்தியிருந்து அதனால் ஏற்படுகிற அரிப்புத்தான் ஆசை, ஆசை என்பது. மனஸுக்கு எடுக்கிற தாகம்தான் ஆசை. ஆசையிருக்கிறதென்றால் மனஸ் என்று ஒன்று இருக்கிறது என்றே அர்த்தம். மனஸ் என்பது இருந்து விட்டால் உபத்ரவம்தான். மனஸ் ஆத்மாவுக்கு த்விதீயமான வஸ்து; அதனால் பயஹேதுவானது என்று பார்த்தோமே! இந்த மனஸ் என்கிற வஸ்து தான் அகண் டானந்தமான பரமாத்மா சிறுத்துக் குறுகிப் போய் ஜீவாத்மா என்று வேஷம் போட்டுக் கொள்ளும்போது இப்படி அதைச் சின்னதாகக் குறுக்க வைத்துக் கட்டுவது. தனி ஜீவன்கள், individual-கள் என்று தங்களை அவர் கள் தெரிந்து கொள்வதே தனித் தனி மனஸ்களைக் கொண்டுதான். ஆனதால் மனஸ் என்பது பரமாத்மாவுக்கு வேறேயாகத்தான் எப்போதும் இருக்க முடியும்.
ரொம்ப உயர்ந்த நிலையில் கூட அது பரமாத்மாவைத் தொட்டுக் கவிந்து கொண்டோ, அல்லது பரமாத்மாவின் சக்தி, கருணை முதலானவற்றை ஓரளவுக்குத் தனக்குள்ளும் நிரப்பிக் கொண்டோதான் இருக்க முடியுமே தவிர, அப்படியே அவனுடைய அகண்டா கார ஸ்வரூபத்தோடு ஒன்றாகி, அவனுடைய அகண்டானந்தத்தைத் தானும் அனுபவிக்க முடியாது. இந்த மனஸைப் பூராவும் அவனிடமே கரைத்து இல்லை யென்றாக்கிக் கொண்டால்தான் சாச்வதமான அகண்ட ஆனந்தம் கிடைக்கும்.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி
சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

அருள்வாக்கு

மனஸை அடக்கினவன்தான் முனி. ‘முனிவனின் குணம் எதுவோ அதுதான் மௌனம்’ என்பதே அந்த வார்த்தைக்கு அர்த்தம். முனிவனின் குணத்தில் பேசாமலிருப்பதுதான் தலை சிறந்தது என்று பொதுக் கருத்து இருந்திருப்பதால்தான் ‘மௌனம்’ என்றால் ‘பேசாமலிருக்கிறது’ என்று ஆகிவிட்டிருக்கிறது. மனஸை அடக்கினவனின் தன்மை என்றாலும், அதுவே நம் மாதிரி மனஸ் அடங்காதவர்கள் அந்த நிலையை அடைவதற்கு உதவுவதாகவுமிருக்கிறது.

பிரம்மஞானியான முனிவன் மௌனம், மௌனமாயில்லா மலிருப்பது என்ற இரண்டையும் விட்டு விடுகிறான் என்று உப நிஷத் சொல்கிறது. முதலில் படித்துப் பண்டிதனாகி, ரொம்பவும் வாதங்கள் சர்ச்சைகள் பண்ணி ஸத்ய தத்வத்தைத் தெரிந்து கொள்கிறான். அப்புறம் பாண்டித்யம், பேச்சு எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரே நிஷ்டையில் போய் விடுகிறான். அப்புறம் பிரம்ம ஞானியாகிறபோது மௌனத்தையும் விட்டு விடுகிறான், மௌனமில்லா மையையும் விட்டுவிடுகிறான் என்று உபநிஷத் சொல்கிறது. இப்படிச் சொன்னால் அது எப்படி ஸாத்யம்? ஒன்று பேச்சை விட்டு மௌனமாக வேண்டும்; அல்லது மௌனத்தை விட்டுப் பேச வேண்டும். இரண்டையுமே விடுவது என்றால் எப்படி முடி யும்? அந்த ஞானியின் நிலைக்குப் போனால்தான் இது புரியும்.

அவனுக்குப் பேச வேண்டும் என்றோ, பேச வேண்டாமென்றோ எந்த சொந்த அபிப்ராயமும் ஆசையும் இருக்காது. லோகாநுக்ரஹத்துக்காக அவன் மூலம் உபதேசமாகப் பேச்சு வந்தாலும் அவன் தான் பேசுவதாக நினைக்க மாட்டான். அதைவிடப் பெரிய மௌன உபதேசத்தில் தக்ஷிணாமூர்த்தி மாதிரி அவனைப் பராசக்தி உட்கார்த்தி வைத்திருந்தாலும் ‘நாம் மௌன விரதம் என்று ஒன்று அனுஷ்டிக்கிறோம்’ என்று அவன் நினைக்க மாட்டான். இதைத்தான் மௌனம், அமௌனம் இரண்டையும் விட்ட நிலை என்பது.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி
ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி
சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

அருள்வாக்கு

திருப்பணி

அநாதைக் குழந்தைகளின் ஸம்ரக்ஷணை, திக்கற்ற ஏழைகளுக்கு ஸேவாஸதனம் வைப்பது, ப்ராணி வதையைத் தடுப்பது, பசு வளர்ப்பது, பசிக் கஷ்டம் யாருக்கும் வராமல் உபகரிப்பது என்றிப்படி எந்தெந்த விதத்தில் முடியுமோ அப்படி நம் அன்பை, வெறும் பேச்சாக இல்லாமல், கார்யத்தில் காட்டினால் பரமேச்வரனின் அன்பு நமக்கும் கிடைக்கும்.
ஈச்வராநுக்ரஹம் எங்கேயும் ப்ரவாஹம் மாதிரி ஓடிக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் நம் மனஸ் கல்லாக இருந்தால், கல்லுக்குள் ஜலம் ஊறாத மாதிரி அநுக்ரஹத்தை நம்மால் தெரிந்துகொள்ள முடிவதில்லை. அதுவே ஒரு துணியை வெள்ளத்தில் போட்டால் அதுதானே விரிந்து ஜலத்தை இழுத்துக் கொள்கிறது. துணியை வெளியே இழுத்துப் பிழிந்தால் ஜலம் கொடுக்கிறது. கல் மனஸைப் பரோபகாரத்தில் இப்படி இலேசாகத் துணி மாதிரி ஆக்கிக் கொண்டால் எப்போதும் நம்மைச் சூழ்ந்திருக்கிற அநுக்ரஹத்தை நன்றாக உறிஞ்சிக் கொள்ளலாம். ஜீவனுக்குச் செய்கிற பெரிய உபகாரம் அவனுக்குக் கருணா மூர்த்தியான ஈசனிடம் பிடிப்பு ஏற்படுத்தித் தருகிற திருப்பணிதான்.
பணி என்றால் ஸர்வீஸ். ஸ்கூல் வைப்பது, ஆஸ்பத்திரி கட்டுவது, ஜல வஸதி பண்ணித் தருவது எல்லாம் ஸர்வீஸ்தான். நாம் ஸோஷல் ஸர்வீஸ் - ஸமூஹப் பணி - என்றாலே இதுகளைத்தான் நினைக்கிறோம். ஆனால், இந்தப் பணியெல்லாம் இறை பணியில் கொண்டு சேர்த்தால்தான் நிறைவுள்ளதாகும் என்று நமக்குப் புரிய வைக்கிறதற்காகத்தான் ஈச்வர ஸம்பந்தமான பணிக்கே ‘திரு’ என்று அடைமொழி கொடுத்து ‘திருப்பணி’ என்று பேர் வைத்திருக்கிறார்கள். ‘திருப்பணி’ என்கிற வார்த்தை எல்லா ஸர்வீஸுக்கும் உச்சி அதுதான் என்று அர்த்தம் கொடுக்கிறது.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

அருள்வாக்கு!

ஸங்கீதம் உருவாக்கும் ப்ரேமை!

வேதாந்தத்திலே எல்லாம் உள்ளத்துக்குள்ளே ஹ்ருதய குஹையில் சாந்தத்தில் ஒடுங்கிவிடுவதாகச் சொல்லியிருக்கிறது. அந்தச் சாந்தத்திலே சேர்க்கத்தான் ஸங்கீதம் ஏற்பட்டிருக்கிறது. சியாமளா என்று ஸங்கீத மூர்த்தியாகப் பராசக்தி இருக்கிறபோது அவளுடைய உள்ளம் அப்படியே குழைந்திருக்கிறது (ம்ருதுள ஸ்வாந்தாம்); அவள் பரம சாந்தையாக இருக்கிறாள் (சாந்தாம்) என்று காளிதாஸன் ‘நவரத்னமாலா’வில் சொல்கிறார். உள்ளக் குழைவு என்பது ப்ரேமை, கருணை ஸங்கீதத்தினாலே ஆத்ம சாந்தம் உண்டான பிறகு, ஸகலமும் அந்த ஆத்மாவே என்பதால் எல்லாவற்றிடமும் அன்பு பொங்குவதைத்தான் சாந்தாம், ம்ருதுள ஸ்வாந்தாம் என்று கவி சொல்கிறார். இந்த்ரிய இன்பமாயில்லாமல் ஆத்மானந்தத்தில் சேர்ப்பதாலேயே ஸங்கீதம் இப்படிப்பட்ட ப்ரேமை உள்ளத்தை உண்டாக்குகிறது. நினைத்துப் பார்த்தாலே மனம் குளிர்கிறது. அம்பிகை வீணையில் சப்த ஸ்வரங்களையும் மீட்டியபடி, அந்த ரீங்காரத்திலேயே சொக்கிப் பரம சாந்தையாக இருக்கிறாள்; அவளுடைய ஹ்ருதயம் புஷ்பம் மாதிரி மிருதுளமாக ஆகி கருணை மதுவைப் பொழிகிறது. இதை நினைக்கும்போது பக்தர்களுக்கும் மனம் குழைகிறது. பக்தியும், அன்பும், சாந்தமும் தன்னால் ஏற்படுகின்றன. வர்ணனாதீதமான சாந்தத்தில், ஆனந்தத்தில் முழுகியிருக்கிற ஸங்கீத அம்பிகை நமக்கும் சாந்தம், ஆனந்தம், அன்பினால் குழைந்த மனம் முதலியவற்றை அநுக்ரஹிக்கிறாள். ‘ஸங்கீத மூர்த்தி’ என்கிறபோது அவள் உத்தேசம் பண்ணி, அதாவது deliberate-ஆக இப்படிச் செய்கிறாளென்று தோன்றவில்லை. ஸப்த ஸ்வரங்களில் ரமிக்கவேண்டுமென்பதற்காகத்தான் அவள் வீணையை மீட்டுவதாகத் தெரிகிறது. “ஸரிகமபதநி ரதாம்” என்று ஸப்தஸ்வரானந்தப்படுபவளாகவே ச்லோகத்தில் ஆரம்பித்திருக்கிறது. அவள் அப்படி ஆனந்தப்பட்டால், லோகம் பூரா அவளுக்குள் இருப்பதால் லோகமும் ஆனந்தப்படுகிறது.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

அருள்வாக்கு

ஆஹாரம் என்றால் நாக்கால் சாப் பிடுவது மட்டுமில்லை. பஞ்ச இந்திரி யங்களுக்கும் ஒவ்வோர் ஆஹாரம் உண்டு. பல காட்சிகளைப் பார்க்கிறோம். இது கண்ணுக்கு ஆஹாரம். பலவிதமான பாட்டு, பேச்சுக்களைக் கேட்கிறோம். இது காதுக்கு ஆஹாரம். இப்படியே நாம் அனுபோகம் பண்ணு கிறதெல்லாம் நமக்கு ஆஹாரம்தான். இதில் எல்லாமே சுத்தமானதாய் இருக்க வேண்டும். மனசைக் கெடுக்கிற காட்சிகளைப் பார்க்கப்படாது; மனசைக் கெடுக்கிற பேச்சுக்களைக் கேட்கக் கூடாது; அனுபவிக்கிற தெல்லாம் ஈச்வர ஸாக்ஷாத்காரத்துக்கு உதவுகிற வையாகவே இருக்க வேண்டும்.
இப்படி பொதுப்படையாகச் சொன்னாலும், இந்தப் பலவிதப் புலன்-நுகர்ச்சிக்கான ஆஹாரங்களிலும் வாயால் நுகர்கிற ஆஹாரந் தான் முக்கியமாக இருப்பதால் அதைப் பற்றி இவ்வளவு ஆசார விதிகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதுதான் ஸ்தூலமாக நமக்கு உள்ளேயே போய், தேகம் முழுக்க ரத்தமாக வியாபிக்கிறது; இதுவே சித்தத்தையும் பாதிக்கிறது. ஒரு பக்கம் ஆஹாரமில் லாவிட்டால் மனுஷ்யன் ஜீவிக்கவே முடியவில்லையென்றால், இன்னொரு பக்கமோ அது மித ஆஹாரமாக இல்லா விட்டால் தேஹத்துக்கும் சிரமம், மன சுக்கும் அசாந்தி என்றாகிறது. வயிற்றிலே திணித்துக் கொண்டே போவதால் சாப்பாட்டுப் பொருளுக்கும் நஷ்டம், காரி யம் செய்ய முடியாமலும் நஷ்டம், இவற்றைவிட தியானத்தில் மனசு ஈடுபடாமல் போவது பெரிய நஷ்டம். ஆகையால் ‘சோற்றால் அடித்த பாண்டம்’ என்றே மனுஷ்யனுக்குப் பேர் இருப்பதால் இந்தப் பாண்டமும், இதற்கு உள்ளே யிருக்கிற மனசும் நல்லபடியாகவளர் வதற்காக ரிஷிகள் காட்டிக் கொடுத்திருக்கும் போஜன விதிகளை மேற்கொண்டு நடத்திக்காட்ட வேண்டும். இதன் முக்கியத்துவமும் அவசியமும் எல்லோருக்கும் புரிவதற்குப் பரமேச்வர னைப் பிரார்த்தனை பண்ணிக் கொள்கிறேன்.

பக்தி, ஞானம், உயர்ந்த குணங்கள், உத்தமப் பண்புகள் ஆகியவற்றால்தான் மனுஷன் மனுஷனாக வாழ்கிறான் என்பது அர்த்தம். இந்தக் குண விசேஷங்கள் விருத்தியாகவும் ஆஹார நியமமே உதவுகிறது என்று நம் சாஸ்திரங்கள் காட்டுகின்றன.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர
சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

அருள்வாக்கு

மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லா பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே.
‘சேவை’ என்று தெரியாமலே அவரவரும் தமது குடும்பத்துக்காகச் சேவை செய்கிறோம். அதோடு நமக்குச் சம்பந்தமில்லாத குடும்பத்துக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, சர்வதேசத்துக்கும் நம்மால் முடிந்த சேவையைச் செய்ய வேண்டும் என்கிறேன். நமக்கு எத்தனையோ கஷ்டங்கள், உத்தியோகத்தில் தொந்தரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை - இத்யாதி இருக்கின்றன. நாம் சோந்தக் கஷ்டத்துக்கு நடுவில், சமூக சேவை வேறா என்று எண்ணக்கூடாது. உலகத்துக்குச் சேவை செய்வதாலேயே சோந்தக் கஷ்டத்தை மறக்க வழி உண்டாகும். அதோடு கூட ‘அசலார் குழந்தைக்குப் பாலூட்டினால், தன் குழந்தைதானே வளரும்’ என்றபடி, நம்முடைய பரோபகாரத்தின் பலனாக பகவான் நிச்சயமாக நம்மைச் சோந்தக் கஷ்டத்திலிருந்து கைதூக்கி விடுவான். ஆனால் இப்படி ஒரு லாப நஷ்ட வியாபாரமாக நினைக்காமல், பிறர் கஷ்டத்தைத் தீர்க்க நம்மாலானதைச் செய்ய ஆரம்பிக்கவேண்டும். ஆரம்பித்துவிட்டால் போதும். அதனால் பிறத்தியான் பெறுகிற பலன் ஒரு பக்கம் இருக்கட்டும்! நமக்கே ஒரு சித்த சுத்தியும், ஆத்ம திருப்தியும், சந்தோஷமும் ஏற்பட்டு அந்த வழியில் மேலும் மேலும் செல்வோம்.
நம்மைப் போலவே சேவை செய்ய விருப்பம் உள்ளவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு எல்லோரும் ஒரே சங்கமாக ஒரே அபிப்ராயமக இருந்து கொண்டு சேவை செய்வது சிலாக்கியம். அப்படிப் பலர் கூடிச் செய்யும்போது நிறையப் பணி செய்ய முடியும். சத்தியத்தாலும் நியமத்தாலும் இப்படிப்பட்ட சங்கங்கள் உடையாமல் காக்க வேண்டும்.
பொழுதுபோக்கு என்று ருசியாகத் தின்கிற இடத்திலும் கண்களைக் கவர்கிற காட்சி சாலைகளிலும் பொழுதை வீணாக்குவது தவறு. இந்தப் பொழுதைப் பிறருக்குச் சேவை செய்வதில் செலவழிக்க வேண்டும்.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Thursday, 24 February 2011

அருள்வாக்கு

வாஸனைகள்!

வாழ்நாள் பூராவும் ஏதாவது ஒன்றில் நம் மனஸ் அழுத்தமாக ஆழமாக ஈடுபட்டிருந்தால்தான் அந்த விஷயமே ப்ராணன் போகிற ஸமயத்திலும் கிளம்பி வந்து நம் மனஸ் முழுவதையும் ரொப்பி வியாபித்துக் கொள்ளும். நாம் அதை நினைக்கிறோம் என்பதில்லை. அதுவே முட்டிக் கொண்டு வந்து தன்னை நினைக்கும் படியாகப் பண்ணும்.
இப்போது ஸைகாலஜியில் சொல்கிறார்கள், நமக்கே தெரியாமல் நாம் எப்பொழுதோ ஆழமாக, அழுத்தமாக நினைத்த விஷயங்கள்தான் தாமாக மனஸின் மேல்மட்டத்துக்கு எழும்பி வருகின்றன என்கிறார்கள். குறிப்பாக, வெளி வியாபாரமில்லாமல் தூங்குகிறபோது இம்மாதிரி பழைய ஸ்டாக் கிளம்பி வந்து ஸ்வப்னமாகிறது என்கிறார்கள். தூக்கந்தான் என்றில்லை. கார்யமில்லாமல் இருக்கிற போதுகளிலெல்லாம் ஒரு த்யானம் என்று உட்கார்ந்தால்கூட, ஜலத்துக் கடியே கையினால் அழுத்தி வைக்கிற கார்க், கையை எடுத்தவுடன் மேலே கிர்ரென்று வருகிறமாதிரி, உள் நினைப்புகள் மேலே வந்து நம்மைப் பிடித்துக் கொள்கின்றன. சாஸ்த்ரங்களிலும் பூர்வ வாஸனை என்று இதுகளைச் சொல்லி, இவற்றை அடியோடு இல்லாமல் வாஸனாக்ஷயம் பண்ணிக் கொண்டால்தான் மனஸ் பரமதெளிவாகத் தெளிந்து நின்று அதில் ஆத்ம ஜ்யோதிஸ் பளீரென்று அடிக்கும் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் நாம் சுபோ, போ” என்று பிடித்துத் தள்ளினாலும் அது போகுமா? போகாது. அதைப் போகப் பண்ணுவதற்கு வழி நம்மால் எவ்வளவு முடியுமோ அத்தனை பாடும் பட்டு ஸத்விஷயங்களை, ஸத்துக்களிலெல்லாம் பரம ஸத்தான - ‘ஏகம் ஸத்’தான - பரமாத்மாவை நினைத்துக் கொண்டேயிருப்பதுதான். இந்த நல்ல வாஸனையை ‘வா, வா’ என்று - சொல்லிக் கொண்டேயிருந்து வரவழைத்து மனஸுக்குள் உட்கார்த்தி வைத்துக் கொண்டால்தான், கெட்ட வாஸனைகள் தங்களுக்கு இடமில்லை என்று ஓடிப்போகும் அமேத்யத்தை எவ்வளவு தேய்த்து அலம்பிவிட்டாலும் நாற்றம் போகமாட்டேன் என்கிறது. ஒரு ஊதுவர்த்தியை ஏற்றி வைத்து விட்டால் அது இருந்த இடம் தெரியாமல் போகிறது.
கடைசியில் நல்ல வாஸனைகளும் போக வேண்டும்; மனஸே போக வேண்டும். அதெல்லாம் ரொம்பப் பின்னாடி வருகிற நிலை.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

அருள்வாக்கு

யௌவனம்


யௌவனம், வாலிபம் என்பது உணர்ச்சி வேகங்கள் கட்டறுத்துக் கொண்டு புரளுகிற பருவம். தற்காலத்தில் மிதமிஞ்சிய சக்தியுடன் ஸர்வ ஜனங்களின் மேலும் ஆளுகை செலுத்திக் கொண்டிருக்கிற பாலிடிக்ஸ், ஸினிமா, பத்திரிகைகள், ஸ்போர்ட்ஸ் ஆகியவை அத்தனை பேரையுமே உணர்ச்சி வேகங்களில் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கையில், தன்னியற்கையாக வேறு அந்த வேகங்களின் எழுச்சிக்கு ஆளாகியிருக்கிற வாலிப வயசு மாணவர்கள் - கல்லூரிகளில் படித்துக் கொண்டிருப்பவர்கள் - ஒழுங்குமுறைகளுக்குக் கட்டுப்பட்டிருப்பது இரண்டு பங்கு (மடங்கு) சிரமம்தான். ஆனாலும் தங்களுடைய எதிர்காலத்துக்கான வளர்ச்சியை முன்னிட்டு அவர்கள் இந்தச் சிரமத்தை சமாளித்தே தீர வேண்டும். அதிலேயேதான் தேசத்தின் தற்கால அமைதி, எதிர்கால அமைதி ஆகியவையும் அடங்கியிருக்கின்றன. வாலிப வயஸுக்காரர்கள் கட்டுப்பாடு இழந்தால் அவர்களும் கெட்டுப் போய், வீட்டிலும் அமைதி குலைந்து கெட்டுப் போய், நாட்டிலும் அமைதியின்மையே அடிவேர் வரை பரவிக் கெடுத்து விடும். கட்டறுத்துப் புரளுகிற இந்த உணர்ச்சி வெள்ளத்துக்கு அணை போட்டு வைப்பதாகத்தான் நம்முடைய முன்னோர்களான பெரியவர்கள் பாலப்பிராயத்தில் அக்ஷராப்யாஸம் ஆன நாளிலிருந்து தெய்வ பக்தியையும், குரு பக்தியையும், அந்த பக்தியிலிருந்து விளைகிற விநயம் என்கிற அடக்க குணப் பண்பையும் விதித்து, குருகுலத்தில் அதைப் பசங்களுக்கு நடைமுறையாக்கிக் கொடுத்தார்கள்

இப்போது குருகுலவாஸக் கல்விமுறை அடிபட்டுப் போய்விட்டாலும், இன்றைக்கும் யுவர்களைத் தப்பான உணர்ச்சி வேகங்கள் அடித்துக் கொண்டு போகாமல் ரக்ஷிப்பதற்கு பக்தியையும், விநயத்தையும் விட்டால் வேறே உபாயமில்லை. தெய்வத்திடம் பக்தியும், அகத்திலே தாயிடமும் -தகப்பனாரிடமும் கல்வி சாலையில் ஆசிரியர்களிடமும் கட்டுப்பட்டு மரியாதை காட்டுவது என்ற ரூபத்தில் பக்தியும் மாணவர்களுக்கு அத்தியாவசியம்.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்