திருவாலியமுதனார்
ஒன்பதாம் திருமுறை
திருவிசைப்பாவை அருளிச்செய்த ஆசிரியர்களில் ஏழாமவ ராகத்திகழ்பவர் திருவாலி யமுதனார். இவர் திருமயிலையில் வைணவ அந்தணர் குலத்தில் தோன்றியவர். சோழநாட்டில் சீகாழிப்பதிக்கு அருகில் உள்ளது திருவாலிநாடு. அதன் தலைநகர் திருவாலி. இந் நகரில் எழுந்தருளியிருக்கும் திருமாலுக்குரிய பெயர் அமுதன் என்பது. இவர்தம் பெற்றோர்கள் திருவாலி அமுதனாரிடத்து அள விறந்த பக்தி பூண்டிருந்த காரணத்தால் தம் திருமகனார்க்குத் திருவாலியமுதன் என்று பெயரிட்டு அழைத்தனர். வைணவர் குடியில் தோன்றிய திருவாலியமுதனார் சிவபிரானிடத்துப் பேரன்பு செலுத்தி அருணலம் பெற்றுச் சிவனடியாராகத் திகழ்ந்தார்.
தில்லை நடராசப் பெருமானையே தம் குலதெய்வமாகக்கொண்டு சிவபக்தியில் சிறந்து விளங்கினார். பெருமான் எழுந்தருளியுள்ள தலங்கள் தோறும் திருப் பதிகம் பாடிப் பரவிவந்தார். பெரும்பாலும் இவர் சிதம்பரத்திலேயே வதிந்துவந்தவர் என்பர்.
திருவாலியமுதனார் தம்மை `மயிலையர் மன்னன்` என்றும், `அந்தணன்` என்றும், தாம் பாடியருளிய திருவிசைப்பா இரண்டாம் பதிகத்தின் திருக்கடைக்காப்பில், ``வரைசெய்மாமதில் மயிலையர் மன்னவன் மறைவல திருவாலி`` எனவும் கூறிக்கொள்வதால் இவர் மயிலையிற் பிறந்தவர் என்பதும் அந்தணர் குலத்தினர் என்பதும் புலனாகின்றன. நான்காம் பதிகத் திருக்கடைக்காப்பில் ``அறை செந்நெல் வான்கரும்பின் அணியானைகள் சூழ் மயிலை `` என்று கூறுவதால் மருதவளம் சூழ்ந்த மயிலை என அறியப்படுகிறது. மயிலை என்பது மயிலாடுதுறையேயாதல் வேண்டும் என்பர். திருவாலியமுதர் பாடிய திருவிசைப்பாப் பதிகங்கள் நான்கு ஆகும். அவையனைத்தும் கோயில் என்னும் சிதம்பரத்தைப் பற்றி யனவேயாகும்.
காலம்:
திருவாலியமுதர் பாடியருளிய திருவிசைப்பா மூன்றாம் பதிகத்தில் 5 ஆம் பாடலில் `எடுத்த பாதம்` `மழலைச் சிலம்பு` என்ற தொடர்கள், முதல் இராஜராஜ சோழனால் (கி.பி. 985 -1014) தஞ்சைப் பெரிய கோயிலில் கைங்கரியங்களுக்காக நியமிக்கப் பெற்ற தளிச் சேரிப் பெண்டுகள் (தேவரடியார்கள்) சிலருக்கும் பெயராக வழங்கப் பெற்றதை ஒரு கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. எனவே திருவாலியமுதனார் காலம், முதல் இராஜராஜ சோழனுடைய கி.பி, 985-1014 ஆம் காலத்திற்கு முற்பட்டது என்பது தெளிவு.
No comments:
Post a Comment