மாணிக்கவாசகர்
இறைவனை வழுத்தும் நூல்களில் பக்தனின் ஆன்மீக அனுபவத்தைச் சொற்களாகப் பிழிந்தெடுத்து, கசிந்துருகிப் பேசுபவை உலகில் மிகமிகச்சில நூல்களே உள்ளன. அவ்வாறு காணப்படும் சில நூல்களில் ஒன்றென இடம்பெறும் சிறப்புபெற்றது, திருவாசகம்.
இதைப்பாடியவர் மாணிக்கவாசகர். அவரை மணிவாசகர் என்றும் அழைப்பர். இப்பெயர் இவருக்கு இறைவனால் இடப்பட்டதாகும்.
வரலாறு
இவர் வாழ்ந்த நாடு பாண்டியநாடு. சொந்த ஊர், மதுரையின் வடகிழக்கே பன்னிரண்டு மைல் தூரத்தில் இருக்கும் “தென்பறம்புநாட்டுத் திருவாதவூர்”. சம்புபாதாசிருதர், சிவஞானவதி என்பவர்களின் புதல்வர். இவருடைய பெயர் திருவாதவூரார். இதுதான் இவருடைய இயற்பெயரா அல்லது சொந்த ஊரை ஒட்டி ஏற்பட்ட காரணப்பெயரா என்பது தெரியவில்லை.
காலம்
இவருடைய காலத்தைக்கூட அறுதியாகக்கூற இயலவில்லை. அறுபத்துமுன்று நாயன்மார்களின் வரிசையில் இவர் இல்லை. சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகையில் இவர் பாடப்பெறவில்லை. ஆகவே எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகிய சுந்தரருக்குக் காலத்தால் பிற்பட்டவராக இருக்கலாம். நம்பியாண்டார் நம்பியால் வகுக்கப் பட்ட திருமுறை வரிசையில் இவரது நூல்கள் இடம்பெறுகின்றன. ஆகவே பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த நம்பியின் காலத்துக்கும் முற்பட்டவர். அரிகேசரி அல்லது அரிமர்த்தனன் என்னும் பாண்டியமன்னனின் காலத்தவர்.
பாண்டிய அமைச்சர்
இவர் இளமையிலேயே ஒரு மாபெரும் மேதையாகத் திகழ்ந்தவர். ஆகவே மதுரைப் பாண்டிய மன்னன், இவரை அழைத்துவந்து தன்னுடைய மந்திரியாக வைத்டுக் கொண்டான். தென்னவன் பிரமராயன் என்னும் உயரிய விருதொன்றைத்தந்து பெருமைப் படுத்தினான்.
ஆன்மீக நாட்டம்
அரசனுக்குக் அமைச்சராக இருந்தாலும் அவர் ஆன்மீக நாட்டம் கொண்டவராகவே இருந்தார். தக்கதொரு குருவை அவர் உள்ளம் நாடியவாறிருந்தது.
குதிரைக் கொள்முதல்
ஒரு நாள், தன்னுடைய குதிரைப் படையைப் பலப்படுத்தவேண்டி, வாதவூராரை அழைத்து, கருவூலத்திலிருந்து பொன்னை எடுத்துக்கொண்டு, கீழைக்கடற்கரைக்குச் சென்று, நல்ல குதிரைகளாகப் பார்த்து, வாங்கிவரும்படி ஆணையிட்டான். அக்காலத்தில் தமிழகத்தின் கடற்கரைப்பகுதிகளில் சில பட்டினங்களில் பாரசீக வளைகுடாப் பகுதியிலிருந்து வந்த அராபியர்கள் குடியேற்றங்களை அமைத்துக் கொண்டு வாணிபம் செய்து வந்தனர். அவர்கள் செய்த வாணிபத்தில் அரபு, பாரசீகக் குதிரைகள் முதன்மை பெற்றன.
ஒட்டகங்களின்மீது பெரும்பொருளை ஏற்றிக்கொண்டு வாதவூரார் பாண்டிநாட்டு வடஎல்லையில் இருந்த “திருப்பெருந்துறை” என்னும் ஊரை அடைந்தார். அவ்வூரை நெருங்கியதுமே வாதவூராருக்கு ஏதோ பெரும்பாரமொன்று மறைந்ததுபோலத் தோன்றியது. அங்கு ஓரிடத்திலிருந்து, “சிவ சிவ” என்ற ஒலி கேட்டது. ஒலியை நோக்கிச் சென்றார்.
தடுத்தாட்கொள்ளல்
அங்கு ஈசனே குருந்தமரத்தடியில் சீடர்களுடன் மௌனகுருவாக அமர்ந்திருந்தான். இறைவன் அவரின்மீது தனது அருட்பார்வையைச் செலுத்தி அவருக்கு “மாணிக்கவாசகன்” என்னும் தீட்சாநாமமும் வழங்கினான். மாணிக்கவாசகராய் மாறிவிட்ட திருவாதவூராரும் திருப்பெருந்துறையிலேயே தங்கி, பெரும் கோயிலைக்கட்டி பல திருப்பணிகளையும் அறப்பணிகளையும் செய்து கொண்டிருந்தார். வந்த காரியத்தையும் மறந்தார்; அரசன் கொடுத்தனுப்பிய பணத்தையும் செலவிட்டு விட்டார்.
குதிரைகளை ஞாபகப்படுத்தி பாண்டியமன்னன் தூதுவர்களை அனுப்பினான். ஈசனின் ஆணைப்படி, ஆவணி மூல நாளன்று குதிரைகள் வந்து சேருமென்று சொல்லி யனுப்பினார். ஒற்றர்களின் வாயிலாக உண்மையினை அறிந்த மன்னவன் செலவழித்த பொருட்களைத் திருப்பித்தருமாறு மாணிக்கவாசகரைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினான்.
நரியைப் பரியாக்கிய திருவிளையாடல்
மாணிக்கவாசகரின் வருத்தத்தைத் தீர்ப்பதற்காக சொக்கேசப் பெருமான், காட்டில் திரிந்த நரிகளைக் குதிரைகளாக மாற்றி, தன்னுடைய பூதர்களை ராவுத்தர்களாக்கி, தானும் “சொக்கராவுத்தரெ”ன்னும் கோலத்தொடு ஓர் அராபியக் குதிரைவணிகனாகப் பாண்டியனை அடைந்து குதிரைகளை ஒப்படைத்தார். ஆனால் இரவில் போலிக்குதிரைகள் நரிகளாக மாறி, பழைய குதிரைகளையும் சேதப்படுத்திவிட்டு, மதுரை நகரில் பெருங்குழப்பம் விளைவித்து, காட்டிற்குள் ஓடிப்போயின.
மீண்டும் அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரை சித்திரவதை செய்தான். வைகையில் வெள்ளம்: பிட்டுக்கு மண் சுமக்கும் திருவிளையாடல்
அப்போது சொக்கேசப்பெருமான், வைகையில் பெருவெள்ளம் தோன்றிடச் செய்தார். அவ்வமயம் பிட்டுவாணிச்சியான வந்தியின் கூலியாளாகத் தானே வந்து, அரிமர்த்தன பாண்டியனிடம் பிரம்படி பட்டு, அந்த அடி எல்லாவுயிர்களின் மேலும் விழுமாறு வழங்கி, தானே ஒரு கூடை மண்ணை வெட்டிப் போட்டு, வைகையின் வெள்ளத்தை அடக்கி மறைந்தார்.
அப்போது சொக்கேசப்பெருமான், வைகையில் பெருவெள்ளம் தோன்றிடச் செய்தார். அவ்வமயம் பிட்டுவாணிச்சியான வந்தியின் கூலியாளாகத் தானே வந்து, அரிமர்த்தன பாண்டியனிடம் பிரம்படி பட்டு, அந்த அடி எல்லாவுயிர்களின் மேலும் விழுமாறு வழங்கி, தானே ஒரு கூடை மண்ணை வெட்டிப் போட்டு, வைகையின் வெள்ளத்தை அடக்கி மறைந்தார்.
சைவத்தொண்டு
மணிவாசகரின் பெருமையை அறிந்த மன்னன், அவரை விடுவித்தான். ஆனால் அவர் அரசவையை விட்டு, திருப்பெருந்துறைக்குச் சென்று தங்கி, குருபீடம் ஒன்றை நிறுவினார். அங்கு அவர் “சிவபுராணம்”, “திருச்சதகம்” முதலிய பாடல்களைப்பாடினார். அதன்பின்னர் இறைவனின் ஆணையை மேற்கொண்டு திருஉத்தரகோசமங்கை என்னும் தலத்தில் இருந்து பாடல்கள் இயற்றினார். அதன்பின்னர் தலயாத்திரைபுரிந்து திருவண்ணாமலையில் “திருவெம்பாவை”, “திருவம்மானை” ஆகியவற்றைப்பாடினார். கடைசியாகத் தில்லையை அடைந்தார்.
அங்கு ஈழநாட்டைச் சேர்ந்த புத்தமதக்குருவை வாதில்வென்று, ஈழமன்னனின் ஊமை மகளைப் பேசவைத்து, அவர்களை மதமாற்றம் செய்தார். ஈழத்து புத்தகுரு கேட்ட கேள்விகளுக்கு, ஈழத்தரசனின் குமாரியின் வாயால் சொல்லச் செய்த விடைகளே, “திருச்சாழல்” என்னும் பதிகமாக அமைந்தன. தில்லையில் “அச்சோப்பதிகம்” போன்ற சிலவற்றைப்பாடினார்.
பாவையும் கோவையும்
ஒருநாள், பாண்டிநாட்டு அந்தண வடிவில், ஈசன் மணிவாசகரிடம் வந்து, அதுவறை அவர் பாடியுள்ள பாடல்களை முறையாகச்சொல்லுமாறு கேட்டுக்கொண்டான். மணிவாசகர் அவ்வாறு சொல்லச்சொல்ல, இறைவனும் தன் திருக்கரத்தால் ஏட்டில் எழுதிக்கொண்டான். திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் எழுதிய பின்னர், ஈசன் மணிவாசகரிடம், “பாவை பாடிய வாயால், கோவை பாடுக!”, என்று கேட்டுக் கொண்டான்.
ஈசன் எழுதிய ஏடு
மணிவாசகர் அவ்வண்ணமே திருக்கோவையாரைப் பாட, ஈசன் அதையும் ஏட்டில் எழுதிக்கொண்டான். எழுதி முடித்தவுடன் இறுதியில், “இவை திருச்சிற்றம் பலமுடையான் எழுத்து”, என்று கைச்சாத்துச் சாற்றி திருச்சிற்றம்பலத்தின் வாசற்படியில் வைத்து மறைந்தான்.
வாசற்படியில் ஏட்டுச்சுவடி இருப்பதைக்கண்ட அர்ச்சகர், தில்லைமூவாயிரவர் ஆகியோர் மாணிக்கவாசகரிடம் அந்தப்பாடல்களுக்குப் பொருளைக் கேட்டனர்.அவனே அதற்கு அர்த்தம்
மாணிக்கவாசகர், அவர்களை அழைத்துக்கொண்டு திருச்சிற்றம்பலத்தை யடைந்து, “அந்நூலின் பொருள் இவனே!”, என்று சிற்சபையில் நடனமாடும் நடராசப் பெருமானைக் காட்டியவாறு, சிற்றம்பலத்துள் தோன்றிய பேரொளியில் கலந்து, கரைந்து, மறைந்தார்